தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எண்ணூரில் தொங்கலில் கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்..பராமரிக்க தவறியதா காவல்துறை? - வாகன ஓட்டிகள் கூறுவது என்ன? - CCTV Camera - CCTV CAMERA

CCTV: சென்னை மாநகரத்தில் பழுதடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள் பற்றியும் அதனால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

சிசிடிவி கேமரா, வாகன ஓட்டிகள், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர்
சிசிடிவி கேமரா, வாகன ஓட்டிகள், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:13 PM IST

சென்னை: சென்னை முழுவதும், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை விரைவில் கண்டறிவதற்காகவும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டன. கடந்த 2018 ஆம் ஆண்டு 'மூன்றாவது கண்' திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டம் துவங்கப்பட்டு ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளிக்கும் சிசிடிவி கேமரா பொறுத்த திட்டமிட்டு அதன்படி சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர், வாகன ஓட்டிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றங்களும், விதிமீறில்களும் கண்காணிக்கப்பட்டு வந்ததுடன், பல செயின் பறிப்பு சம்பவங்கள், கொலை குற்றவாளிகளைக் கண்டறிவது, ரேஸில் ஈடுபட்ட வாகனங்களை அடையாளம் காண்பது என பல புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டன.

ஆனால் தற்போதைய நிலவரமோ சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து பலத்த சந்தேகத்தை எழுப்புவதுடன், சிசிடிவி கேமராக்களின் நிலையை அறிய தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எண்ணூர், தேரடி, காலடிப்பேட்டை, ராஜாகடை, டோல்கேட், காசிமேடு, இராயபுரம், பாரிமுனை உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. சிசிடிவி கேமராக்களின் ஒயர்கள் அறுந்து கிழே விழுந்தபடியும், கேமராக்கள் பூமியை பார்த்தபடியும் மற்றும் கம்பத்துடன் சாலையில் கீழே விழுந்தும் கிடக்கிறது. இதுபோன்ற சிசிடிவி கேமராக்களால் காவல்துறைக்கு எவ்வித பயனும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகளான திருச்செல்வன் மற்றும் ராஜா கூறுகையில், "எண்ணூர் விரைவுச் சாலையில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் வேலை செய்யவில்லை. சிசிடிவி கேமராக்கள் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தான் இருக்கிறது.

சிக்னல்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கின்றன. ஆனால் வேற எந்த சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை. ஒயர்கள் அறுந்து போய் கிடக்கின்றன. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் ராஜாராம் கூறுகையில், "சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு காவல்துறையினரின் பணிகள் மிகவும் எளிமையாகி விட்டது. செயின் பறிப்பு, கொலை, சாலை விதிமீறல், விபத்து உள்ளிட்ட அனைத்து குற்றங்களிலும் காவல்துறையினருக்கு சிசிடிவி பெரும் உதவி செய்கிறது. சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொருத்தப்பட்ட கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

பராமரிக்கப்படாததன் காரணமாக தற்போது சிசிடிவி கேமராக்கள் பயனற்று கிடக்கிறது. குறிப்பாக அதிகமாக குற்றங்கள் நடக்கும் என எதிர்ப்பாரக்கக்கூடிய வட சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பயனற்று கிடக்கிறது. இதில், சென்னை மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கேமராக்களை பழுதுபார்க்க வேண்டும். ஒரு குற்றத்தை நேரில் கண்டவர் பிறழ் சாட்சியாக மாற வாய்ப்புகள் உண்டு. ஆனால், சிசிடிவி கேமராக்கள் அப்படி அல்ல, என்ன நடந்ததோ அதையே அப்படியே காட்டும்.

எனவே, முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும். நிர்பயா நிதி மூலம் பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சீர் செய்தும், தேவைப்படும் இடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உண்மை குற்றவாளிகள் இல்லை என சிலர் கூறினர்.

அப்போது காவல்துறைக்கு சிசிடிவி கேமராக்கள் தான் மிகவும் பயன்பட்டது. எனவே சிக்கலாக இருந்த பல்வேறு குற்றச்சம்பங்களில் குற்றவாளிகளை கண்டறிய பயன்படும் சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் பொறுப்பேற்று சீர் செய்ய வேண்டும்.

குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்காகவும் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கோவையை வட்டமிடும் பன்னாட்டு போர் விமானங்கள் : வரலாற்றில் முதன் முதலாக நிகழும் கூட்டுப்பயிற்சி - Tarang Shakti 2024

ABOUT THE AUTHOR

...view details