வேலூர்:குடியாத்தம் அடுத்துள்ள உப்பரப்பள்ளி கிராமத்தில் இருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வூர் விவசாய நிலங்களில் இருக்கும் மின்மோட்டார் வயர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் திருடி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
முன்னதாக, உப்பரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கோவிந்தசாமி, தில்லக் பாபு, பூபாலன், ஜெயவேல், பாஸ்கர், ஆகியோரின் விவசாய நிலங்களில் இருந்த சுமார் 1000 மீட்டர் மின்மோட்டார் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாபு என்ற விவசாயி 1500 வாழைச்செடிகளை நடுவதற்காக ஏற்பாடு செய்திருந்த நிலையில் காலை நிலத்திற்கு வந்து தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை ஆன் செய்த போது அதிலிருந்து மின் வயர் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடன் வாங்கி பெற்ற வாழைச்செடிகளை நட முடியாமல் போனதாக விவசாயி பாபு வேதனை அடைந்து உள்ளார்.
மேலும், அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், பல இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளதாகவும் அந்த இளைஞர்கள் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்க கூடும் என தெரிவித்தனர்.
கஞ்சா சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்
விவசாய நிலங்களில் திருடு போன மின்மோட்டார் வயர்களை கண்டுபிடித்து தரும் படியும் திருட்டுப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இந்தத் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என காவல்துறையினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராம விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை! குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை!