சேலம்: லஞ்சம் வாங்குவதை தடுப்பதும், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுமே லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கிய பணி. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை காவலருக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்த சேலத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியுள்ள சம்பவம் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றும் ரவிக்குமாரை தொடர்பு கொண்டு போக்குவரத்து அலுவலகத்திற்கு சோதனை செய்ய வருவதற்கு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், சோதனை நடத்தாமல் இருக்கவும் மாதாமாதம் ரூ.50 ஆயிரம் லஞ்சப்பணம் தருவதாகவும் முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று (அக்.08) இரவு 1மணி அளவில் பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறி, ரவிக்குமார் சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு சதாசிவத்தை வரவழைத்துள்ளார்.