கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தால் நேர்ந்துள்ள உயிரிழப்பு சம்பவம் நம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
பெரும் சோகம் சூழ்ந்துள்ள கள்ளக்குறிச்சியில் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் நமது செய்தியாளர் ரவிச்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கருணாபுரத்தின் எந்த வீதி, எந்த தெருவுக்கு சென்றாலும், கணவனை இழந்த பெண்களும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும், தாய் - தந்தை என இருவரையும் இழந்து தவிக்கும் பிள்ளைகளின் மரண ஓலம் மனதை நொறுங்க செய்தது.
இந்நிலையில் தான், இச்சம்பவத்தில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்பவரின் தாயை சந்திக்க அவரது வீட்டைத் தேடி நமது செய்தியாளர் சென்றார். அப்போது வீட்டில் உட்கார்ந்திருந்த கண்ணுக்குட்டியின் தாயை ஒரு பெண் சாப்பிட அழைக்கிறார்.
அவள் யாரென்று பார்த்தபோது அவர் கள்ளச்சாராயத்தால் பலியான ஒருவரது வீட்டைச் சேர்ந்த பெண். கண்ணுக்குட்டியின் தாயாரை சாப்பிட அழைத்திருக்கிறாள். அந்த வீட்டில் மரணித்தவரின் உயிரிழப்புக்குக் காரணம் கண்ணுக்குட்டி விற்ற கள்ளச்சாராயம் என்றாலும் அந்த மக்கள் அதனைப் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் இயல்பாக அவர்கள் ஜோதியை சாப்பிட அழைத்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
சம்பவம் அன்று நடந்தது என்ன?:அப்போது நம்மிடம் கண்ணுக்குட்டி தாய் ஜோதி பேசியபோது, "ரொம்ப காலமாக இங்கு கள்ளச்சாராயம் விற்கும் போதுகூட இப்படி நடக்கல. மூட்டை தூக்கி பொழப்பு நடத்தும் மக்கள் உடம்பு வலி காரணமாக ஓடி வந்து குடிப்பாங்க.. போவாங்க. சம்பவம் அன்னைக்கு கள்ளச்சாராயம் மூட்டையில் கொண்டு வரப்பட்டது.
சந்தேகத்தில், எனது இரண்டாவது மகன் தாமோதரன் கள்ளச்சாராயத்தை விரலில் தொட்டு சுவைத்து பார்த்தான். அப்போது, "சரக்கு கெட்டு போய்விட்டது சப்ளையை நிறுத்துங்க, யாரும் குடிக்காதீங்க.. நிறுத்துங்க" என்றான். இருந்தாலும் அதற்குள் சரக்கு விற்கப்பட்டது. கொஞ்ச நேரத்தில் எல்லாரும் சாவுறாங்க. இனி யாருக்கும் கொடுக்காதீங்க, குடித்தவங்களோட இருக்கட்டும் என கூறி சரக்கு சப்ளை நிறுத்தப்பட்டது" என சம்பவத்தன்று நடந்ததை விளக்கினார் ஜோதி.
அதனை தொடர்ந்து பேசியவர், "ஊருக்குள்ள இரண்டு பேரு, மூனு பேருனு இறந்து போனாங்க. எல்லாரும் தூக்கிட்டு ஓடுறாங்க..இதையெல்லாம் என் பிள்ளை கன்னுகுட்டி பார்த்தான், அப்புறம் தாமோதரனை கூட்டிகிட்டு போலீஸ் கிட்ட சரண்டர் ஆகிட்டான். அவனது மனைவியும் கன்னுகுட்டியுடன் சென்று சரண்டர் ஆகிட்டா" என பெற்ற பிள்ளைகள் இல்லாமல் செய்வதறியாது தவிக்கும் ஜோதி தனது குமுறல்களை கூறினார்.
என் மகன் தப்பு பண்ணல:கள்ளசாராயம் எங்கிருந்து கிடைக்கிறது என நமது நிருபர் எழுப்பிய கேள்விக்கு, "மல்லிகா மலையில் இருந்து தான் வாங்கிட்டு வருவோம். பத்து பைசா கூட பிள்ளைகளுக்கு வேணும்னு எடுத்து வைக்கல. என் பிள்ளைங்க மேல் எந்த தப்பும் இல்லை. இரவு நேரத்துல கூட வீடு தேடி வந்து ஆம்பளை பொம்பளை என பார்க்காமல் வாங்கிட்டு போவாங்க.
இந்த நேரத்திற்கு எதுக்கு வரேங்க என என் மகன் திட்டுவான். தினமும் இதே தான் போர்களம். எவ்வளவோ பேருக்கு நல்ல விஷயம் செய்திருக்கான், எங்களுக்கு பத்து பைசா எடுத்து வைக்கல. எல்லாரும் சாராயம் வித்து வீடு, காடு எல்லாம் வாங்குறாங்க. எங்களுக்கு எதுவும் இல்லை " என வேதனையுடன் கூறும் ஜோதி, "இதற்கு முன்னதாக போலீஸ் வரமாட்டாங்க. இப்போது தான் வர்ராங்க: என்கிறார்.
இதையும் படிங்க: சினிமா டைரக்டர் ஆகணும்... கள்ளச்சாராயத்தில் தாய், தந்தையை இழந்த சிறுவனின் ஆசை! - Kallakurichi Illicit Liquor Issue