திருநெல்வேலி:வெளிநாடு செல்வதற்காக குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நிலையில், திரும்பி குழந்தையை கேட்கும்பொழுது உறவினர்கள் குழந்தையை தர மறுப்பு தெரிவித்ததால், குழந்தையின் தாயர் உறவினரது வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்தவர் பிரவீனா (36). இவரது கணவர் குணசீலன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை உள்ள நிலையில், பிரவீனா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில், வேலைக்காக துபாய் சென்ற பிரவீனா, அங்கு பணியாற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, கரோனா காலத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு குருநாதன் பிரவீனாவை அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2020ல் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடந்து, விசா புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குழந்தையை துபாய்க்கு அழைத்துச் செல்வதில் தம்பதிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குருநாதரின் உறவினரான சங்கர், கவிதா மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் குழந்தையைப் பராமரித்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு இருவரும் துபாய் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, குழந்தையைப் பராமரிப்பதற்கு மாதந்தோறும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு திருநெல்வேலி வந்து பிரவீனா, சங்கர் - கவிதாவிடம் குழந்தையைக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் பல்வேறு காரணங்களைக் காட்டி குழந்தையைத் தர மறுத்துள்ளனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர், தனிப்பிரிவு டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.