மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி முருக பூபதி (30) மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் கோச்சடைப் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 07) அதிகாலை வழக்கம்போல கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனாவைக் கொலை செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து, முருக பூபதியும் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும், அதிகாலை தூக்கத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர் முருக பூபதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்துள்ளனர்.
அந்த சமயத்தில், முருக பூபதி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் உயிருக்குப் போராடிய முருக பூபதியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 2 வயதுக் குழந்தை முத்து மீனாவின் உடலை உடற்கூறு ஆய்விற்கா அனுப்பிவைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருக பூபதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடுமையான சர்க்கரை நோயினால் முருக பூபதி அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், மதுரையில் தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்ற பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. எனவே தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக. மேலும் சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் - help@snehaindia.org மற்றும் சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028 என்ற முகவரியில் நேரில் தொடர்புகொள்ளலாம்.
இதையும் படிங்க:அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்!