தென்காசி:ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி. இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
உச்சமாகாளி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களிடம் குடும்ப தேவைக்காக ஒன்றரை லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடன் தொகையை வாராந்திர முறைப்படி செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேலாக பணத்தை செலுத்த முடியாத நிலை இருந்துள்ளது. மேலும், மகளிர் குழு ஊழியர்கள் மீதான அச்சத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கடனை செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்த உச்சமாகாளி தனது கணவர் குழந்தைவேலு வேலைக்கு சென்ற நிலையில், தனது 3 குழந்தைகளுக்கும் அரளி கொட்டை விதைகளை அரைத்து கொடுத்துவிட்டு தானும் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையும் படிங்க:பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: அமைச்சர் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு!
இதனையடுத்து, குழந்தைகள் வாந்தி எடுத்து அலறிய நிலையில் அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், உச்சமாகாளியின் மூன்றாவது குழந்தையான 4 வயது சிறுவன் பிரவீன் ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அரளி விதை சாப்பிட்ட மற்ற இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய் உச்சமாகாளி கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென்காசியில் சுய உதவி குழுக்கள் மற்றும் அதனை வசூல் செய்யும் ஊழியர்கள் மீதான பயத்தின் வாயிலாக மூன்று குழந்தைகளுடன், பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சமப்வம் குறித்து கடையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.