சென்னை:திருமுல்லைவாயல், நாகம்மை நகர் பகுதியில், கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரே ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த தாக்குதல் குறித்து தங்களது நண்பர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், துக்க நிகழ்வின் போது தாக்குதலுக்கு ஆளான நண்பர்கள், தங்களது நண்பனை தாக்கிய இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், நண்பர்கள் 5 ககும் மேற்பட்டோர், அந்த இளைஞரைக் கைகளாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளைஞர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற போலீசார், தகராறில் ஈடுபட்டதாக 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரது பெற்றோர் தனது மகனுக்கும், இந்த பிரச்னைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், பொய் வழக்கில் கைது செய்து அழைத்து வந்ததாகவும் கூறி, அவரை விடுவிக்கும்படி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.