தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் வசித்து வருபவர், பரமசிவம். இவரது மனைவி மணிமேகலை (38). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது மகள் அபிராமி. இவர் தட்டெழுத்து பயிற்சியில் கொண்ட ஆர்வம் காரணமாக, ஆறாவது வகுப்பு பயிலும்போதே தட்டெழுத்து பயிற்சியில் சேர்க்கப்பட்டு பயின்று வந்துள்ளார்.
தினமும் பள்ளிக்கல்வி முடித்து, தொழிற்கல்வி பயிற்சிக்கு தனியாகச் செல்லாமல், துணைக்கு தன் தாயார் மணிமேகலையையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது மகள் பயிலும் தட்டெழுத்தைக் கண்டு, தானும் நேரத்தை வீண் செய்யாமல் தட்டெழுத்து பயிலும் முயற்சியை தாயார் மேற்கொண்டுள்ளார்.
அரசு முறைப்படி பத்தாம் வகுப்பு முடித்த பின்னரே தொழிற்கல்வியில் தேர்வு எழுத முடியும் என்ற விதிமுறை இருப்பதால், அபிராமி தன் தாயார் மணிமேகலையுடன் 15வது வயதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டெழுத்து இளம் பயிற்சியில் தேர்வு எழுதி, முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தேர்வுக்குச் சென்ற தாயார் மணிமேகலையும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டெழுத்து பயிற்சியில் இளநிலை சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தட்டெழுத்து உயர்நிலை பயின்று, அதிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் தொழிற்கல்வி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, சுருக்கெழுத்து பயிற்சியிலும் தனது ஆர்வத்தை செலுத்தியுள்ளனர்.