கோவை:தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கோவையிலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமியப் பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி இந்த சிறப்பு தொழுகை நிகழ்வில் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத் ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கியமான பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர்களில் ஒருவரான முகமது இப்ராஹிம் தனது மகனான இஸ்மாயிலை இறைவனுக்காகப் பலி கொடுக்க முன்வந்த தியாகத்தைப் போற்றும் விதமாக இந்த பக்ரீத் பண்டிகையானது தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.