சென்னை:சென்னையிலிருந்து பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்திச் செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆக.29 மற்றும் 30ஆம் தேதிகளில் செங்கல்பட்டு அருகே நடத்திய சோதனையில், பொத்தேரி பகுதியில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றை மடக்கி அதிலிருந்த மூவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், மூவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததுள்ளனர். அதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை ஆய்வு செய்துள்ளனர்.
அந்த சோதனையில், காரில் 10 பொட்டலங்களில் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருளைக் கடத்தி வந்த மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காரில் கடத்தி வந்தது 10.13 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் என்பதும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.50.65 கோடி என்பதும் தெரிய வந்துள்ளது.
அதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் ஆறு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த மெத்தம்பெட்டமைன் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.