சேலம்: இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி (GST) அமலுக்கு வந்து நேற்றுடன் (ஜூலை 1) 7 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அந்த வகையில் ஜிஎஸ்டி தினம் நாடு முழுவதும் ஜூலை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ஜிஎஸ்டி பவனில் ஜிஎஸ்டி விழா நடைபெற்றது.
மேலும், சேலம் மத்திய ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரியின் ஐஆர்எஸ் ஆணையாளர் சித்லிங்கப்பா தேலி தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சேலம் ஜிஎஸ்டி ஆணையர் சித்லிங்கப்பா தேலி ஐஆர்எஸ், "இந்த 7 ஆண்டுகளில் வணிக நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 53 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்துவோரின் நலனுக்காக எளிமைப்படுத்தப்பட்டு மத்திய அரசு, கடந்த நிதியாண்டில் ரூ.20.18 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் ஈட்டியுள்ளது.
தற்போது, எளிய வரி மற்றும் "ஒரு நாடு - ஒரு சந்தை - ஒரு வரி" (One country, One market, One tax)என்ற இலக்கை நோக்கி நம் நாடு நகர்ந்து வருகிறது. ஜூலை 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, சேலத்தில் சுமார் 36 ஆயிரமாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை இந்தாண்டு (ஜூன் 2024) சுமார் 74 ஆயிரமாக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வரி அடிப்படையில் சுமார் 106 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நிதியாண்டில் சேலம் ஆணையாளர் அலுவலகத்தில் 2017 - 18ஆம் ஆண்டு ரூ.1,358.31 கோடி வரி வருவாய் வந்தது. ஆனால், 2023 - 24ஆம் நிதியாண்டில் ரூ.3,970.71 கோடியாக அதிகரித்துள்ளது.
இது 2017 - 18ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலில் 192.33 சதவீதம் அதிகமாகும். வர்த்தகம் மற்றும் தொழில்துறையுடன் தொடர்பு கொள்ளும்போது டிஐஎன் எண் கட்டாயமாக குறிப்பிடப்படுகிறது. புதிய கோப்புகளைக் கைமுறையாகச் செயலாக்காமல், அலுவலகத் தொடர்பு முழுவதுமாக மின்-அலுவலகம் மூலமாகவே உள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவாக 53 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களை அரசு நடத்தி, வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் மற்றும் செய்திகளை உடனடியாக வெளியிட்டது. மேலும், வரிவிதிப்பு விதிகளில் மாற்றம் ஏற்பட்டால், வர்த்தகம் குறித்து மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் செய்திகள் மூலம் பல்வேறு இணைய தளங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
எங்கள் அலுவலகத்தில் உள்ள பிரத்யேக ஜிஎஸ்டி - சேவா கேந்திரா (சேவை மையம்) வசதி மூலம் வர்த்தகத்தால் முன்வைக்கப்படும் அனைத்து சந்தேகங்களும் முறையாகத் தெளிவுபடுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டன் செல்லும் அண்ணாமலை? அரசியலில் இருந்து 6 மாதம் ஓய்வா?.. மேலிடத்திற்கு பறந்த கடிதம் - பின்னணி என்ன?