சென்னை: நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் அதிகபட்சமாக ஆந்திராவில் உள்ள ரெண்டசிந்தலா என்ற இடத்தில் 115.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல், ஜார்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் வெப்ப அலை வீசி உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கரூர் பரமத்தி, ஈரோடு, திருச்சி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 18, புதுச்சேரியில் இரண்டு என 20 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 47 ஆண்டுகளுக்குப் பின்னர் 111.20 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து உள்ளது. மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.20 டிகிரி பாரன்ஹீட், மீனம்பாக்கம் 105.26 டிகிரி பாரன்ஹீட், கோவை 103.64 டிகிரி பாரன்ஹீட் மற்றும் கடலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல்,
தருமபுரி - 106.70 டிகிரி பாரன்ஹீட்
ஈரோடு - 110.48 டிகிரி பாரன்ஹீட்
காரைக்கால் - 100.40 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையம் - 106.52 டிகிரி பாரன்ஹீட்
நாகை - 102.20 டிகிரி பாரன்ஹீட்