சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டறைக்கு வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேர்தலை ஒட்டி பண பட்டுவாட மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கவிருப்பதாகத் புகார் ஒன்று வந்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட ஐந்து இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவில் இன்துராம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.