சென்னை:இயக்குநர் மோகன் ஜி யை சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், திருச்சி அழைத்து வரப்படுவார் எனவும் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை அளித்துள்ள பத்திரிகை வெளியீட்டில் (C.No. 14/SB/Press/TRI/2024), சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மேலாளராக பணியாற்றி வரும் கவியரசு என்பவர் அளித்த புகாரின் பேரில் மோகன் ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் யூடியூப் பக்கத்தில் மோகன் ஜி யின் பேட்டி இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதாகவும், அந்த வீடியோவில் மோகன் ஜி பேசியது மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் , இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வீடியோவில் பழனி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் மாத்திரை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பாக மோகன் ஜி பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இவ்வாறு தகவலை பரப்புவது கலவரத்தை தூண்டும் செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டதாக குறைகூறியுள்ள அவர், "கஞ்சா, கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது" என பதிவிட்டுள்ளார்.