தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று திறந்து வைத்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் மோடி, தங்களது நூறு சதவீத தோல்வியை உறுதியாக உணர்ந்த பின்பு, அதன் எதிரொலியாகத்தான், இதுவரை அதிமுகவை ஊழல் ஆட்சி என வர்ணித்தவர்கள், இன்று திடீரென எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்து பேசுகின்றனர்.
எப்படியாவது நோட்டாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று விட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு யுக்தியை பிரதமர் கையாள்கிறார். அதனால்தான் இந்த குழம்பிய பேச்சு. அவரது சாதனைகளை பட்டியலிட முடியாது, வேண்டுமானால் அவரால் ஏற்பட்ட வேதனைகளைத்தான் சொல்ல முடியும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 370, 270 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறுவதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம். இவர்களால் டெல்லி தலைநகரில் கூட வெற்றி பெற முடியாது. கடந்த முறை 37 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, பாஜக ஆட்சி அமைத்தது.