சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய (வெள்ளிக்கிழமை) சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தின் போது அவர் பேசும் போது, "கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இந்த சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்: "நீட் என்ற தேர்வு எளிய மாணவர்களை மருத்துவக் கல்விக்கு நுழைய விடாமல் தடுப்பது. நீட் பயிற்சி மையத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
UPSC தேர்விலும் முறைகேடுகள் நடத்தப்பட்டதையும் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் விலக்கு சட்டத்தைக் கொண்டு வருமாறு, கூட்டணி கட்சியோடு இணைந்து திமுக நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்" என தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்:"அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு கூடாது என்று சொல்லும் நிலை வந்துள்ளது. ஏன் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்? அங்கு தான் முறைகேடு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேர்வது குறைவு.
ஆனால், மற்ற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்கிறார்கள். நீட் தேர்வு கண்டிப்பாக நம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எந்த அளவிற்குச் சென்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தீர்மானத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது" எனக் கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:"தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த சிறந்த மருத்துவர்களும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்பிபிஎஸ், எம்டிஎஸ் படித்து மருத்துவராக ஆகவில்லை. நீட் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும். National Testing Agency அல்ல, National troubling agency. நுழைவுத் தேர்வு நடத்த எந்த தகுதியும் என்டிஏவுக்கு இல்லை" என பேசினார்.
மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை:"கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு கல்வி ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது. நீட் போன்ற தேர்வு எதிர்காலத்தில் தேவையில்லை. கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் படிக்க வர வேண்டும் என்று முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன்" என்றார்.