கோயம்புத்தூர்:தமிழ்நாடு போதைப் பொருள் கடத்தும் மாநிலமாகத் திகழ்வதாக கூறியும் அதனை தடுக்காத அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெயராமன், "போதைப் பொருள் கடத்தல் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதில் குறிப்பாக, சென்னை மையமாக செயல்படுகிறது. நேற்று முன்தினம் 100 கிலோ கஞ்சா சென்னையிலும், புதுக்கோட்டையில் 81 கிலோ போதைப் பொருள் மற்றும் 180 கிலோ கஞ்சா மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்துள்ளனர்.
இது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. ஆனால் இதை தமிழ்நாடு போலீசார் பிடிக்கவில்லை. டெல்லியில் 2 ஆயிரம் கிலோ உயர் ரக போதை பொருள் பிடிக்கப்பட்டது. இதில் சினிமா தயாரிப்பாளர் கடத்தல் புள்ளி ஜாஃபர் சாதிக் ஈடுபட்டது தெரியவந்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி மனைவி கீர்த்தி உதயநிதி ஜாஃபர் சாதிக் மூலம் படம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.