திருநெல்வேலி:பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா திருநெல்வேலிக்கு வந்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “வேளாண் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில் இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி என்று சொல்லக்கூடிய பக்கவாட்டு அனுமதியின் மூலம் விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படுவதை மனித நேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசுத் துறைகளில் எல்லா தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிறந்த இயக்குநரான மாரி செல்வராஜ், சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.
தென் மாவட்டங்களில் தேவையான சாதிய நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தீய நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என குற்றம்சாட்டினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி மட்டுமின்றி, பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் காரணமாகவே, இப்போது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை நாங்கள் தெரிவிப்போம்.
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அங்குள்ள மக்கள் அது பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பப்படி அதை விட்டுவிட வேண்டும். மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும்.