சென்னை:தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.
அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அன்றாடம் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.
இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் கலைஞர்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர்.