தேனி: திமுக சார்பில் தேனி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் தேனி லட்சுமிபுரம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், "மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதைப் பொதுமக்கள் மனதில் வைக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது, நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்காது முற்றிலும் ஒற்றை சர்வாதிகார நாடக மாற்றி விடுவார்கள் சமூக நீதியைச் சீர்குலைத்து விடுவார்கள்.
ஊழலுக்குப் பல்கலைக்கழகம் கட்டினால் அதற்கு மோடி தான் வேந்தராக இருப்பார். ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடி. தேர்தல் பத்திரம் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சியின் கணக்கிற்குக் கொண்டுவந்த உத்தமர்தான் மோடி.
10 ஆண்டுகளாக இந்தியப் பிரதமராக இருந்து சாதனைகளைச் சொல்ல முடியாமல் மக்களைப் பிளவு படுத்தும் வேலையைச் செய்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் இந்தியா வளம்பெறும் குறிப்பாகத் தமிழகம் வளம்பெறும்.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி இரண்டு விஷயங்களைத்தான் மத்திய அரசிடம் கேட்பார். ஒன்று திமுக ஆட்சி நடைபெற்றால் அதைக் கலைக்க சொல்வார்கள் அல்லது தங்கள் மீதான ஊழல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யச் சொல்லுவார்கள்.