விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான என்.புகழேந்தி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருப்பினும், கட்சிப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கு திடீரென மயக்கமடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகழேந்தி எம்எல்ஏ மறைந்த செய்தி அறிந்த அமைச்சர் பொன்முடி, உடனே அங்கு விரைந்து வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, புகழேந்தியின் உடல் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, ஏராளமான திமுகவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.