தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டங்களை படித்துவிட்டு பரப்புரை செய்யுங்கள்.. ஸ்டாலின் அறிவுறுத்தல்! - மு க ஸ்டாலின்

DMK District Secretaries Meeting: அனைவரையும் காப்பாற்றும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாக பரப்புரை செய்வோம் எனவும், சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது எனவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DMK District Secretaries Meeting
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 3:22 PM IST

Updated : Feb 23, 2024, 3:36 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக சார்பிலும் கட்சிப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக முக்கிய நிர்வாகிகளுடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதில் அனைவரையும் காப்பாற்றும் அரசாக நம்முடைய அரசு செயல்படுகிறது என்பதை நமது சாதனைகள் வழியாக பரப்புரை செய்வோம் என இன்று (பிப்.23), காணொலி வாயிலாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், "மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான், நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான், சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் நினைவிடமும், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற பிப்.26ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும், நம் கட்சியையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிக பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன். அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்இடி (LED) திரைகளுடன் பிரமாண்ட கூட்டங்களாக இருந்தன.

மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் திமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாக புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஒரு தீர்மானமாகப் போட உள்ளோம்.

மேலும், சரியாக செயல்படும் நிர்வாகிகளுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம், அதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களின் எண்ணம், பிரதிபலிப்பை வைத்தே கட்சி தலைமை செயல்படும் நடவடிக்கையும் எடுக்கும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திருப்தியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் பணிகள் மந்தமாக இருக்கிறது.

தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், சரியாக செயல்படாதவர்கள் மீது கட்சித் தலைமை எடுக்கும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். அமைச்சர்கள், நாடாளுமன்றத் தேர்தல் தானே என்று மெத்தனமாக இருந்து விடாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பொறுப்பு அமைச்சராக உள்ள இடங்களில் தொடர்ந்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொகுதி பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கூலித்தொழிலாளி டூ உரிமையியல் நீதிபதி.. மயிலாடுதுறை நபரின் விடாமுயற்சி சாத்தியமானது எப்படி?

Last Updated : Feb 23, 2024, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details