திருச்சி மற்றும் பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று (மார்ச் 22) திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையைத் துவங்கி வைத்தார்.
இந்த பரப்புரை கூட்டத்தில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளராகப் போட்டியிடும் அருண் நேருவையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார்.
தொடர்ந்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "திருச்சி என்றாலே திருப்புமுனைதான். இப்போது, இந்தியாவுக்கே திருப்புமுனையை ஏற்படுத்தத் திரண்டிருக்கிறோம். அனைத்துக்கும் துவக்கம் திருச்சி தான். திமுக தேர்தலில் போட்டியிடுவது பற்றி 1956ல் முடிவு எடுக்கப்பட்டது திருச்சியில் மாநாட்டில் தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. அதன் அடையாளமாகத்தான் திமுகவுக்கு 6 முறை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன், அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்த விடியலுக்கான கூட்டம் தான், தமிழ்நாட்டில் அதிமுகவை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர வைத்தது. உங்களில் ஒருவனான ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். அன்று முதல் இந்தியாவே பாராட்டும் வகையில், நல்லாட்சி நடத்தி வருகிறேன். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நடக்கிறது இந்த தேர்தல். தேர்தல் என்பதால் தான் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்.
அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லாவிட்டால், பெரும்பாலும் வெளி நாட்டில் தான் இருப்பார்.
சமீபத்தில் சேலத்தில் பேசிய மோடி, தமிழ்நாட்டில் அவருக்குச் செல்வாக்கு அதிகரித்து விட்டதால், திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை, என்று பேசியிருக்கிறார். உண்மையிலேயே தன்னுடைய ஆட்சி முடியப்போகிறது என்று மோடிக்குத் தான் தூக்கம் வரவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம் முகத்திலும், கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த அவரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். அதற்கு ஒரு முறையாவது பதில் சொல்லி இருக்கிறாரா?. வாரா வாரம் வந்தாலும் பதில் சொல்லவில்லை. இனிமேல் வந்தாலும், பதில் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர், தமிழ்நாட்டிற்குச் செய்ததாக ஒரு திட்டத்தையாவது அவரால் சொல்ல முடியுமா?. அவர் நம்மை விமர்சிக்கிறார். நான் சொல்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், மூன்று ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த சாதனைகளின் பட்டியலைச் சொல்லவா? சொன்னால் இன்று ஒருநாள் போதாது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பார்த்துப் பார்த்து அவர்களில் ஒருவனாகப் பல திட்டங்களைத் தீட்டித் தருபவன் தான், உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி மகனாகிய ஸ்டாலின். தாங்க முடியாத நெருக்கடியிலும், மாநில அரசாக இவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். ஆனால் நீங்கள் என்னென்ன திட்டங்கள், தமிழ்நாட்டிற்குச் செய்திருக்கிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்டால், எதற்காவது சரியான பதில் இருக்கிறதா?.
அவருடைய தோல்விகளை மறைக்க, மாநில உரிமைகளைப் பறிக்க, தமிழ் மொழியைப் புறக்கணிப்பு செய்ததை மறைக்க, தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்க, மொத்தத்தில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை மறைக்கத் தேவையில்லாத விஷயங்களைப் பேசி திசை திருப்புகிறார். தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் நடத்தும் கபட நாடகங்களை இனிமேல் தமிழக மக்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய மக்களும் நம்ப மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
திருச்சி பழைய பால் பண்ணை முதல் உயர்மட்ட சாலை அமைப்பதோடு, அணுகு சாலையும் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில், சொல்லாத ஒன்றையும் வாக்குறுதியாகக் கொடுக்கிறேன். மக்களுக்கான திட்டங்களைச் சிந்தித்து, செயல்படுத்தப் பாடுபடுபவர்கள் நாம். ஆனால், தமிழ்நாட்டிற்கென சொல்வதற்கு எதுவுமே இல்லாத ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி. அவரால் சாதனைகளைச் சொல்ல முடியவில்லை. மேடைக்கு மேடை 10 ஆண்டுகளாக, ஊழலற்ற அரசு நடத்தியதாகக் கூறுகிறார்.
பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி நாம் மட்டுமின்றி, நாடு முழுக்க கேட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 10 ஆண்டுகளில் ஊழல்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. அதற்கு ஒரு இமாலய எடுத்துக் காட்டு தான் இந்திய ஜனநாயகத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கும் தேர்தல் பத்திர ஊழல். கடந்த 5 ஆண்டுகளில், இடி., சிபிஐ., ஐடி., ஆகிய துறைகளைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி அவர்களை சோதனைக்கு அனுப்பி வந்தனர். கட்சி நிதியாக, தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கின்றனர். 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கின்றனர்.
வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை. துவராக விரைவுப்பாதை கட்டுமான திட்ட ஊழல், சுங்கச் சாவடி கட்டண ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல், ஓய்வூதிய திட்ட ஊழல், எச்.ஏ.எல்., விமான வடிவமைப்பு திட்ட ஊழல், 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. தேர்தல் பத்திரத்தில் நிதி வசூல் செய்தது போல், பிரதமர் நிதி திட்டத்தில் வசூல் செய்திருப்பது பற்றி, ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அம்பலமாகப் போகிறது.
அதேபோல, ரபேல் ஊழல் ரகசியங்களும் வெளியே வரும். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சி நடத்திய மோடி ஊழல் பற்றிப் பேசலாமா? பாஜக அட்சியின் ஊழல்களை மறைக்க, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளனர். இதற்கு, பாஜகவின் தோல்வி பயம் தான் காரணம். ஏற்கனவே கைது செய்யப்பட்ட துணை முதலமைச்சர், 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். கடந்த மாதம் ஜார்கண்ட் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இல்லையா?.
தனக்கு எதிராக இந்தியா என்ற வலிமையான கூட்டணி சேர்ந்து விட்டனரே, மக்கள் ஒன்று சேர ஆரம்பித்து விட்டனரே என்ற பயத்தில் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை. தமிழ்நாட்டில் நம் ஆட்சிக்குத் தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கின்றனர். மீண்டும் பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறி விட்டார். விட்டு விடுவோமோ! திமுக காரங்கள் நாங்கள். நீதிமன்றத்துக்கு பேனோம்.
உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த பின், பொன்முடிக்குப் பதவி பிரமாணம் செய்து விட்டு, ராஜ்பவனிலிருந்து தேர்தல் பரப்புரையைத் துவங்குவதாக ஆளுநரிடம் கூறி விட்டு வந்தேன். அதற்கு, அவர், 'பெஸ்ட் ஆப் லக்' என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். ராஜ்பவனிலிருந்து துவங்கி இருக்கும் இந்த பயணம் குடியரசுத் தலைவர் மாளிகை வரை போகப் போகிறது. வேறு எந்த ஆளுநரையாவது நீதிமன்றம் இந்த அளவுக்குக் கடுமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறதா?.
மக்களை எதிர்கொள்ளப் பயப்படும் பாஜக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை மூலமாகவும், ஆளுநர் மூலமாகவும் எதிர்கொள்வது கோழைத்தனம், பேடித்தனம். உங்களின் மிரட்டல் உருட்டல் அரசியல் அத்தனையும் மக்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இது இந்தியா கூட்டணிக்கும், பாஜவுக்குமான யுத்தம் அல்ல. இது இந்திய மக்களுக்கும், பாசிச பாஜகவுக்குமான யுத்தம் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த யுத்தத்தில் மக்கள் தான் வெற்றி பெறுவர். பாசிச பாஜக வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும்.
இந்திய மக்கள் இந்தியா கூட்டணியுடன் அணி திரண்டுள்ளனர். பிரதமர் அவர்களே, மாண்புமிகு பிரதமர் அவர்களே ஜூன் 4ஆம் தேதி வரப்போகும் இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்தி உங்கள் தூக்கத்தைத் தொலைக்கப் போகிறது. தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு. தமிழ்நாட்டிற்கு விரோதமாக அனைத்தையும் செய்து விட்டு, தமிழ் தான் மூத்த மொழி என்று பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். வடிக்கலாமா?.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு? தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு? இதைக் கூச்சம் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து சொல்வாரா அவர். நீங்கள் வளர்க்கும் வெறுப்பு தீ, மத்திய அமைச்சர் ஒருவர், கர்நாடகாவில் வெடித்த குண்டு தமிழர் வைத்ததாகச் சொல்லும் அளவுக்கு வந்துள்ளது. பாஜக அரசு மக்களிடம் இருந்து சுரண்டுமே தவிர, மக்களுக்கு எதுவுமே செய்யாது. அதனால், மக்கள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் போது, நம்முடைய நிதியிலிருந்து, நாம் தருகிறோம்.
அதையும் மனசாட்சி இல்லாமல், கொச்சைப்படுத்தி ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான நிதியை வரியாக வசூல் செய்து, அதில் நியாயமான பங்கைத் திருப்பித் தர ஏன் மறுக்கிறீர்கள் என அதைத்தான் கேட்கிறோம். ஒரு ரூபாய் வசூல் செய்து கொண்டு, 29 பைசா மட்டும் திருப்பித் தருவது முறையா, நியாயமா, தர்மமா என்று தான் கேட்கிறோம். இதைக் கேட்டால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று சொல்கிறார்.
எவ்வளவு ஆணவம், எவ்வளவு வாய்க் கொழுப்பு!. உங்கள் அரசியலுக்காக, தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவீர்களா?. பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா?. மக்களுக்குக் கொடுப்பது எதுவும் பிச்சை அல்ல, அது அவர்களின் உரிமை. மக்கள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு உதவி செய்வது அரசில் இருப்பவர்களின் கடமை. அந்த கடமையை திமுக அரசு சரியாகச் செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்து விட்டு, தொழிலதிபர் கூட்டத்தில் இப்படிப் பேசுவீர்களா? ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா?.
ஒரு ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் கூட, வரிக் கட்டும் மக்கள் பாதிக்கப்படும் போது, அரசு உதவும் என்று எதிர்பார்ப்பது தவறா?. மக்களுக்கு உதவ முடியாவிட்டால், எதற்கு நிதி அமைச்சர் பதவி? பாஜகவில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆணவம் தான், பாஜகவை வீழ்த்தப் போகிறது. எதேச்சதிகார, சர்வாதிகார பாஜகவைத் தமிழ்நாட்டில் இருக்கும் பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, சிறுபான்மையினர் நலன் பற்றி இப்போது பேசுகிறார்.
இருண்ட கால ஆட்சியை மறந்து விட்டு இருப்பீர்கள் என்று, தப்புக் கணக்குப் போடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை, மர்ம மரணம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை என பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நீண்ட பட்டியல் போடலாம். ஊழல் கறை படிந்த அவரது கரங்கள், பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்து விட்டு, தமிழ்நாட்டிற்கான அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று லாலி பாடியவர் பழனிசாமி.
இப்போது, அதே பாஜகவுடன் கள்ளக் கூட்டணி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். பாசிச எண்ணங்களுக்கும் முடிவு எழுதப்படும். இதெல்லாம் நடக்க இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போது தான் இந்திய நாட்டையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும், பன்முகத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் காப்பாற்ற முடியும். இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: அமைச்சருக்கு வந்த போன் கால்.. பதட்டமான தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார்! - Tenkasi Candidate Rani Sri Kumar