தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"2026ல் திமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்திய கோவை மக்கள்" - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை! - M K STALIN COIMBATORE VISIT

தமிழகத்தில் மீண்டும் 2026ல் திமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு இருந்தது என்று கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DMK
மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 10:16 PM IST

கோயம்புத்தூர்: கோவை போத்தனூர் திருமண மண்டபத்தில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தினர் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், "எந்த எதிர்பார்ப்புமின்றி கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு கீழாக உள்ள கழகத்தினருக்கு நீங்கள்தான் பலமாகவும், பாலமாகவும் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு கொள்கைகளை விதைப்பது மிக முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.

நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்கும் நேரத்தை செலவிடுங்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கட்சிப்பணிக்கு ஒதுக்குங்கள்" என அறிவுறுத்தினார்.

நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவை மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர் அவை நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும். இதுமட்டும் அல்லாது, தங்க நகை தொழில் பூங்கா குறித்த கோவை மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். மேலும், 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மக்களின் வரவேற்பு சிறப்பாக இருந்தது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவையில் நகை செய்யும் பொற்கொல்லர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முன்னதாக, தமிழ்நாடு வீட்டு வசதி திட்டத்திற்கான நிலமெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால், கோவை மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலம் கை எடுப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்ற முதலமைச்சர் தங்க நகை தயாரிக்கும் பொற்கோளர்களை சந்தித்து அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து கோவை பொள்ளாச்சி சாலையில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோரும் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர் என பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details