சென்னை:திமுக துவங்கக் காரணமாக இருந்த அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17) மற்றும் திமுக துவங்கிய நாள் (செப்.17) என மூன்று நிகழ்வையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக நடத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த நிலையில், 2024 ஆண்டுடன் திமுக துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த பவளவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.
அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில், "திமுகவின் பவளவிழாவையொட்டி வீதிகள் தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி வீடுகள் தோறும் பறந்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணாவால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம்.