தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம்; "நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" - முதலமைச்சர் காட்டம்! - neet grace marks 2024 - NEET GRACE MARKS 2024

NEET Issue: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்யக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சர் முக ஸ்டாலின் கோப்புப்படம்
அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சர் முக ஸ்டாலின் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 5:20 PM IST

சென்னை: இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்ததாவது, "சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள், அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம், நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

அவை கூட்டாட்சியை சிறுமைப்படுத்து, சமூகநீதிக்கு எதிரானவை, தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை, நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அதேநேரம், இன்று சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "நீட் தேர்வு என்பது குழப்பமான ஒன்று, நீட் தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு முதலில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

நீட் தேர்வில் கடந்த ஆண்டுகளில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். ஆனால் நடப்பாண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது சந்தேகத்தை எழுப்புகிறது. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்படுகிறது.

ஒரு மாணவர் ஒரு கேள்வியை எழுதாவிட்டால் அவருக்கு நான்கு மதிப்பெண்கள் குறையும். அந்த வகையில், ஒரு கேள்வி தவறாக இருந்தால் 716 மதிப்பெண் தான் வர வேண்டும். ஆனால் 718, 719 மதிப்பெண்கள் எவ்வாறு வந்தது என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கியதாகவும் கூறியுள்ளது.

தேர்வின் பொழுது போதுமான நேரம் இல்லாதவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நீட் தேர்வு எழுதிச் சென்ற மாணவர்களின் துப்பட்டாவை ஆராய்ந்தது, காதுகளில் கம்மல் கழற்றச் சொல்லியது போன்ற செய்தியைத் தான் பார்த்தோம். நேரம் போதவில்லை என எந்த செய்தியும் நாங்கள் பார்க்கவில்லை.

இதுபோன்ற குளறுபடி தீர்க்காததால் நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமூக நீதி மீது அக்கறை கொண்ட அனைவரும் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். தேசிய தேர்வு முகமை தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர், இதுகுறித்து முழுமையான விவரங்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ்:இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், யாருக்கும் பயனளிக்காத நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக கடந்த 4ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.

மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில், நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது வியப்பையும், நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும், முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் 719, 718, 717 என மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

இந்த மதிப்பெண்களை எடுக்க சாத்தியமே இல்லை என்பதால், விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இதற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் ஐயத்தை போக்குவதற்கு மாறாக, ஐயத்தை அதிகரித்திருக்கிறது.

நீட் தேர்வில் நேர இழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் வந்ததாகவும், சிலர் நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரிவித்துள்ள தேர்வு முகமை, அந்த மாணவர்களுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரிய வில்லை. தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல, சமூகநீதியும் அல்ல.

தேர்வு முகமை பின்பற்றிய இந்த பிழையான நடைமுறையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் 50 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

570க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் தரப்பில் கூறப்படும் செய்திகள் கவலையளிக்கின்றன. தேசிய தேர்வு முகமை செய்த தவறுக்காக அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த இரு நோக்கங்களையும் நீட் தேர்வு நிறைவேற்றவில்லை. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள் பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது.

இந்த அநீதியைப் போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறுத் தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க:இத கவனிச்சீங்களா..? அதிமுக - பாஜக வாக்குகளை சேர்த்தாலும் தோல்விதான்.. வட சென்னை தொகுதியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details