தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்" .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - MK Stalin letter

MK Stalin: "நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்" என திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 1:06 PM IST

சென்னை:உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக, திமுகவினருக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில், “முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கிக் கிடந்த தொழில் வளர்ச்சியை மீட்டெடுத்து ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது.

அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்கு பயணிக்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

31 லட்சம் வேலை வாய்ப்புகளை உள்ளடக்கி, 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், 51,157 கோடி ரூபாய் மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன.

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனான பயணத்தில் மற்றொரு கட்டம்தான், நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.

அமெரிக்கப் பயணம்:ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன்பின், செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.

10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இவையனைத்தும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும். தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்கவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித் தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

1971ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின், நியூயார்க் நகருக்குச் சென்று அங்கு தமிழ் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைப்புக் குழு:அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும், அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த குறுகிய இடைவெளியில் தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், ஆட்சிப் பணியும், கட்சிப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்.

ஒவ்வொரு நாளும் பணிகளைக் கண்காணிப்பேன். என் உணர்வுகளை கடிதம் வாயிலாகவும், காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய் வீடான தமிழ்நாடு பற்றியே தான் என் மனது சிந்திக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details