தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,045 குளங்களுக்கு தண்ணீர்.. அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Athikadavu Avinashi project - ATHIKADAVU AVINASHI PROJECT

Athikadavu Avinashi Project Inaugurate: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நாளை (ஆக.17) காணொலி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் எனவும், இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதை உறுதி செய்துள்ளோம் எனவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

அமைச்சர் சு.முத்துசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் சு.முத்துசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 2:26 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானிவாய்க்கால் முதல்போக நன்செய் பாசனத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, நாளை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட 15ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அந்த வகையில், பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இருப்பதால் இந்தாண்டு வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசாணை வெளியிட்டது.

அதன்படி, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக பாசனத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, செய்தித்தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கால்வாய் மதகு பட்டனை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்டனர். அப்போது வாய்க்காலில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரில் அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.

முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் நீர் திறப்பு படிப்படியாக 1,000, 1,500, 2,300 கன அடி என அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக.15 முதல் டிச.12ஆம் தேதி வரை அதாவது 120 நாள்களுக்கு என மொத்தம் 23 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூர் மற்றம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கமான பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கேட்டுக்கொண்டார். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.37 அடியாகவும், நீர் இருப்பு 25.98 டிஎம்சியாகவும், நீர் வரத்து 876 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வாய்க்காலில் 500 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 750 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, "ஈரோடு மாவட்டம் பவானி நீரேற்று நிலையத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழா நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் முதலமைச்சர் உத்தரவின் மூலம் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம். ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் உள்ளன. அவையெல்லாம் சரி செய்யப்பட்டு முழுமையாக அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நீதிமன்ற உத்தரவின் படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கான பம்பிங் ஸ்டேஷன் ஒன்று முதல் மூன்று வரை கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தவில்லை. அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி வந்த பின்பு தான் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு 'செக்' வைத்த ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details