சென்னை:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 40க்கு 40 என்ற வெற்றியை நோக்கி திமுக கூட்டணி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைப்பதற்கு கூட போதுமான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம் எதுவும் எடுபடவில்லை. பாஜகவின் கனவு பலிக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும். முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு இது. மக்களவைத் தேர்தல் வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். தற்போது இந்த மகத்தான வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்" என்று கூறினார்.