சென்னை: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி வந்தாக கூறி இலங்கை கடற்படையின் ரோந்து படகு மூலம் சிறைப்பிடிக்க முயன்றபோது, ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. இதில் நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் மூவர் மீட்கப்பட்டனர். அதில் மலைச்சாமி என்பவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள இருவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்து ராமநாதபுரம் மீனவர்கள் இன்று மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மீனவர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (54), முத்துமுனியாண்டி (57), மலைச்சாமி (59) மற்றும் ராமச்சந்திரன் (64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.