தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்தர்ஷன் லோகோ விவகாரம்; மு.க.ஸ்டாலின், வைகோ கடும் கண்டனம்! - DD logo color change issue - DD LOGO COLOR CHANGE ISSUE

DD Logo Color Change: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர், தூர்தர்ஷனின் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

DD Logo Color Change Issue
DD Logo Color Change Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 4:50 PM IST

சென்னை:அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தூர்தர்ஷனின் செய்தி சேனலான டிடி நியூஸின் லோகோ நிறத்தை, சிவப்பில் இருந்து காவி நிறமாக மாற்றியுள்ளது. இந்த நிலையில், இவ்வாறு தூர்தர்ஷனின் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைமையகம் ஆகியோரது 'X' வலைதளப் பக்கத்தில், தூர்தர்ஷனின் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் 'X' வலைத்தளப் பதிவு:"உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருத மயமாக்கினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள். தற்போது தூர்தர்ஷனின் இலச்சினையிலும் (Doordarshan Logo) காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்.

தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்" என்று கூறியுள்ளார்.

திமுக தலைமை 'X' வலைத்தளப் பதிவு:"வினாச காலே விபரீத புத்தி என வடமொழியில் கூட கூறுவார்கள். அதைத்தான் நாம் அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே உணவு என்றெல்லாம் இந்திய துணைக்கண்டத்தில் தங்களுடைய கருத்தைத் திணிப்பதில் வக்கிரப் புத்தியோடு செயல்படுபவர்கள் பாஜகவினர்.

அவர்களுடைய எண்ணமும், செயலும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமே அழிவைத் தருவதாகும். ஒற்றுமை, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், சுயமரியாதை, ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளுக்கெல்லாம் எதிரானவர்கள் பாஜகவினர் என இந்தத் தேர்தல் பிரச்சாரக் காலங்களில் அதிகமாகவே அவர்களுக்கு உணர்த்தினோம்.

ஆனாலும், அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. உணரமாட்டார்கள். உன்மத்தம் பிடித்தவர்கள் அவர்கள். இதன் வெளிப்பாடுதான், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என அறம் பாடிய அய்யன் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியுள்ளார்கள். இதைப் பலமுறை நாம் தடுத்தும் கூட தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கரையை அடித்திருக்கிறார்கள்.

மீண்டும், மீண்டும் இதைச் செய்கிறார்கள் என்றால், இது ஆணவம் தானே. இந்த ஆணவம் ஜீன் 4ஆம் தேதி அழிந்தார்கள் என்பதைப் புலப்படுத்தும்" என்று பதிவிட்டுள்ளனர்.

இதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இந்துத்துவ மதவாத கோட்பாட்டை மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து அரசுத் துறைகளில் திணித்து வருகிறது.

18வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு மிக வேகமாக அரசுத் துறைகளின் மூலம் பிரச்சாரம் செய்வதற்கும் பாஜக அரசு துணிந்து விட்டது. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான 'பிரச்சார் பாரதி' தனது தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையைக் காவி நிறத்திற்கு மாற்றி இருக்கிறது.

ஏற்கனவே சிவப்பு நிறத்தில் இருந்ததைக் காவி வண்ணத்தில் மாற்றியதன் மூலம் மக்களவைத் தேர்தலில் மறைமுகமாக அல்ல நேரடியாகவே அரசு பொதுத்துறை நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முனைந்திருக்கிறது. இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியின் விளக்கம் ஏற்புடையதல்ல. ஜி-20 மாநாடு நடைபெற்ற போது அதன் இலச்சினையையும் காவி நிறத்தில் தான் பாஜக அரசு, இடம் பெறச் செய்திருந்தது. தற்போது அதே போல பிரச்சார் பாரதியும் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளின் இலச்சினையைக் காவி நிறத்தில் மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தேர்தல் ஆணையம் இறையாண்மையுள்ளதாகப் பாரபட்சம் இன்றி செயல்படுமானால் உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"பாஜக அரசியல் கட்சியாக நீடிக்காது.. மோடியின் வழிபாட்டு தளமாக மாறுகிறது" - ப.சிதம்பரம்!

ABOUT THE AUTHOR

...view details