விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள்? ஒன்றிய அரசுப் பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை. நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன் கூறினார். ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.
இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை ,பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை, காலம் காலமாகத் தடுத்த இவர்கள், இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது? குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை.
ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு, ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பு,சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப் பறிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க. அதனால் தான் கூறுகிறோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது.