சென்னை: இந்தியாவின் 75வது குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் 22 துறைகளில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு தின தேநீர் விருந்தை இன்று(ஜன.26) மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார். இந்தத் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன், த.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் முப்படை வீரர்களும் அவர்களின் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
குடியரசு தின தேநீர் விருந்தில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் மீன்வளம் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாஜக சார்பில் கரு நாகராஜன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தேநீர் விருந்துக்கு வருகை தந்தவர்களை அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கேச் சென்று ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு விருதுகளைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார். அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பில் பங்கேற்ற 22 துறைகளில் துறை ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று துறை ஊர்திகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, குடியரசு தின விழா அணிவகுப்பு கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற கல்லூரிகளில் முதலிடம் பெற்ற ராணி மேரி கல்லூரி, இரண்டாம் இடம் பெற்ற ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, மூன்றாம் இடம் பெற்ற சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும், பள்ளி மாணவர்களில் முதல் பரிசை ஜெயகோபால் கரடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், இரண்டாம் பரிசை லூர்து மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும், மூன்றாம் பரிசை வள்ளியம்மாள் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 22 அலங்கார ஊர்திகளில் முதல் பரிசு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும், இரண்டாம் பரிசு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், மூன்றாம் பரிசு இளைஞர்களின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கும் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகளை துறையின் செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு ஆளுநரின் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளுக்கான 2023 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான விருது மற்றும் பரிசுத்தொகையையும் ஆளுநர் வழங்கினார்.
ஊரக வளர்ச்சி அமைப்புக்கான விருது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அமைப்புக்கும், சமூக சேவையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மதன் மோகன், சென்னைச் சேர்ந்த குபேந்திரன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. அதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பசுமை அமைதி காதலன் நிறுவனத்திற்கும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முத்துகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமலை ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:"தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்காக இல்லை" - சீமான் குற்றச்சாட்டு..!