சென்னை: சர்வதேச - தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பதக்கங்களை வென்ற 589 தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனையருக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நம்முடைய தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா மாநிலத்துக்கு அடுத்து அதிக வீராங்கனை அனுப்பி உள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 16 பேர் பங்கேற்றுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும், நீங்கள் முனைப்போடு வெல்ல வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் இங்கு உள்ளவர்களின் பெயர் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கும், உங்களுக்கும் உள்ளது.
பல்வேறு சமூக தடைகளைத் தாண்டி பெண் வீராங்கனைகள் இங்கு வந்துள்ளீர்கள். சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. பல்வேறு சாதனைகளை படைத்து பெருமை தேடி தருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ போட்டியில் தமிழ்நாடு முதன்முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அரசுப் பணியில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உங்களைப் போன்ற வீரர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை வைத்து வருகின்றார்கள்.