திருநெல்வேலி: பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், அப்துல் வஹாப். இவர் திமுகவின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தார். ஆனால், உள்கட்சி பூசல் காரணமாகக் கடந்தாண்டு இவரது மாவட்டச் செயலாளர்கள் பதவி கட்சித் தலைமையால் பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் திருநெல்வேலியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராகவே வலம் வருகிறார். பதவி பறிக்கப்பட்டாலும், மனம் தளராமல் அனைத்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னை முன்னிலைப்படுத்தியே வருகிறார். இந்த சூழ்நிலையில்தான், அப்துல் வஹாப்பின் மகன் திருமண விழா இன்று (பிப்.18) நடந்தது. இதற்காக, பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட அப்துல் வஹாப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்படக் கட்சியின் முக்கியத் தலைவர்களை இவ்விழாவில் பங்கேற்கத் திட்டம் தீட்டினார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இத்திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, அப்துல் வஹாப் தனது மகன் திருமணத்தையொட்டி, வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். குறிப்பாக, மாநகரில் எங்குத் திரும்பினாலும் திமுகவின் கொடி கட்டப்பட்டிருந்தது, வழிநெடுகிலும் அவரை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டன.
குறிப்பாக, திருமண விழா நடந்த கே.டி.சி. நகர் மாதா மாளிகையின் முன்பகுதியில் நாடாளுமன்றம் தோற்றத்தில் அலங்காரப் பேனர் வைக்கப்பட்டிருந்தது, அனைவரது கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக, இதுபோன்று கட்சி நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் தங்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்ற தோற்றத்தைப் பின்னணியாகக் கொண்ட பேனர்களை வைப்பது வழக்கம்.
ஆனால், எம்எல்ஏ அப்துல் வஹாப் தனது மகன் திருமணத்தையொட்டி, கல்யாண மண்டபத்தில் முன்பு நாடாளுமன்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பேனர் வைத்திருந்தது அரசியல் ரீதியாகவும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அதன் இருபுறமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், '40 நமதே நாடும் நமதே' என்ற வாசகமும் அதில் இடம்பெற்றது.
அதாவது இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது. எனவே, தேர்தல் நெருங்கும் நிலையில் அப்துல் வஹாப் வைத்திருந்த இந்த அலங்கார பேனர்கள் அக்கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, ஏற்கனவே மத்தியில் ஆளும் பாஜக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்ற எதிர்பார்ப்பும் சமீபத்தில் எழுந்தது. எனவே, திமுக தொண்டர்கள் தங்கள் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினைப் பிரதமர் வேட்பாளராகப் பார்ப்பதில் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதில், ஒரு படி மேலேச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் தான், இன்று இந்த ஏற்பாடு செய்திருப்பதாகவே திருமணத்திற்கு வந்திருந்த நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.
இதற்கிடையில் திருமண விழாவிற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்துல் வஹாப்பின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து வாயடைத்துப் போனார். இதனால், கடும் மகிழ்ச்சி அடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண மேடையில் அப்துல் வஹாப்பை புகழ்ந்து தள்ளினார். அவர் பேசும்போது எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர், அப்துல் வஹாப்.
இவர் என்ன சொன்னாலும் செய்வார்; இவரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காகத் தான் இன்று நடந்த பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவே, நான் ஒப்புக்கொண்டேன் என அனைவரது மத்தியிலும் அப்துல் வஹாப்பை புகழ்ந்து தள்ளினார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஏற்பாடுகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குஷிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பேனரில் இடம்பெற்ற இந்தி வார்த்தைகளால் சர்ச்சை:அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தோற்ற பேனரின் இருபுறமும் இந்தியில் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், திமுக தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். குறிப்பாக, அண்ணாவின் காலத்தில் தொடங்கி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என தற்போது வரை இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறது, திமுக. இதுபோன்ற சூழ்நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் இந்தி வாசகம் எழுதப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக அரசிடம் அடகுவைத்த உரிமைகளை மீட்க அஞ்சும் அதிமுக - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி