சென்னை:சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.
சென்னை ஆற்காடு சாலை மற்றும் போரூர் மார்க்கமாக கிண்டி செல்லும் சாலைகளில் ஈரடுக்கு மெட்ரோ பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 48 ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வரும் வழித்தடம் மூன்றில் ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.
இந்த ரயில் நிலையம் 19 கி.மீ உயர் மட்ட பாலமாகவும், 26.4 கி.மீ நிலத்தடியிலும் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளின் 3வது வழித்தடத்தில் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை மொத்தம் 910 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில், சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் ஆற்காடு சாலை சந்திப்பில் நடைபெறும் மெட்ரோ பணிகளை உதயநிதி பார்வையிடும் போது, மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி கோரிக்கைகளை முன்வைத்தார். மெட்ரோ ரயில் பணியின்போது பயன்படுத்தப்படும் நீர், குழாய்கள் மூலம் பயன்படுத்தும் நீரினை சாலையில் வெளியேற்றுவதாகவும், இதனால் சாலையில் நடப்போர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.