தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் - மாப்பிள்ளையூரணியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், 'கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டும். தூத்துக்குடியில், வின்ஸ்பாட் (WINSPOT) தொழிற்சாலை ரூ.14,000 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி மதிப்பில் இன்டர்நேஷனல் பர்னிச்சர் பூங்காவிற்கு நிதி ஒதுக்கி தொடங்கப்பட உள்ளது. ரூ.29 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புயல் வந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ரூ.6,000 கொடுத்தார். ஆனால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது, 10 அமைச்சர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இருந்தனர். ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி இரக்கமற்ற ஒர் சர்வாதிகாரி. மிக்ஜாம் புயலுக்கு காசு கொடுக்கவில்லை. நீட் தேர்வினால் 22 குழந்தைகள் இறந்தனர். கரோனா நேரத்தில் மக்களை சிறையில் அடைத்து வைத்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் நிறைய பேரை சுட்டுக் கொன்றார்கள். எதற்கும் தமிழகத்திற்கு வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழகத்திற்கு வருகிறார்.