சென்னை: சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை மற்றும் நேரு ஸ்டேடியம் அருகே சாலையோரம் குடிசை அமைத்து 22 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், ஆசிய போட்டிகள் நடத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, மூன்று மாதத்தில் தங்க வீடு தருவதாக உறுதியளித்து அவர்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தி சூளை சந்திப்பு பகுதியில் கண்ணப்பர் திடலில் தங்க வைத்துள்ளனர்.
ஆனால், மாநகராட்சியின் வார்ட் 58-க்கு உட்பட்ட சூளை கண்ணப்பர் திடல் பகுதியில் கைவிடப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்ட மக்கள் அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இடத்திற்கு வீடற்றோற்கான காப்பகம் ( Home for homeless) என்ற பெயரும் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சிகள் மாறினாலும் இப்பகுதி மக்களுக்கு விடியல் கிடைக்காமல் இருந்துள்ளது.
அடிப்படை வசதி:கழிவறை வசதிகள் இல்லாமல் பொதுகழிப்பிடத்தை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். தேர்தல் நேரங்களில் அரசியல் வாதிகள், அதிகாரிகள் வாக்குறுதிகளை அளித்தாலும் அந்த மக்களுக்கு வீடு வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமால் இருந்து வந்துள்ளனர்.
மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் மண்டபங்களில் தங்க வைக்கப்படுவது தொடர்கதையாக இருந்ததே தவிர நிரந்த தீர்வு என்பது கிடைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இப்பகுதி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சென்னை மாமன்ற கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இதைனையடுத்து, கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், கண்ணப்பர் திடல் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், அவர்களுக்கு வாழத் தகுதியான குடியிருப்புகளை வழங்குமாறும் எம்எல்ஏ பரந்தாமன் கோரிக்கை விடுத்திருந்தார்.
கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் அமைச்சர் உதயநிதி (Credits - ETV Bharat Tamilnadu) அதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெருநகர் சென்னை மாநகராட்சியிடம் கண்ணப்பர் திடலில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில், அவர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டுவதற்காக, 1.83 ஏக்கர் நிலத்திற்கான அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று அப்பகுதி மக்கள் புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று உறுதி அளித்திருந்தார்.
22 கால கனவு நிறைவேற்றம்: இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக கண்ணப்பர் திடலில் உள்ள வீடற்றோற்கான காப்பகத்தில் வசித்து வரும் மக்களின் குரலுக்கு இன்று விடை கிடைத்துள்ளது. சென்னை 58 வது வார்டில் உள்ள கண்ணப்பர் திடலில் வீடற்றோர் காப்பகத்தில் தங்கி இருக்கும் 114 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம், புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.
அதன்படி, வீடற்றோர்கான காப்பகத்தில் வசித்த 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஒதுக்கீடு குடியிருப்புகளில் மக்களுக்கு குடியிருப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தங்களின் 22 ஆண்டுகால கனவை இன்றைக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை அவசியம் தேவையானது. திமுகவை பொறுத்தவரை சொல்வதைச் செய்யும் இயக்கம். அடுத்த மழை வருவதற்குள் தங்களுக்கு வீடு வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். சொன்னபடியே தங்களுக்கு தற்போது வீடு ஒதுக்கியுள்ளார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளது. இனி தங்களுக்கான வீட்டில் நிம்மதியாக இருக்கலாம். வீடு இல்லாததால் தங்களுக்கு அரசு ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இனி ஆவணங்கள் எளிதில் கிடைக்கும். பயனாளி பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினால் போதும். மற்றதை முதல்வர் பார்த்துக்கொள்வார்” இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வீடற்றோர்கான காப்பகத்தில் வசிக்கும் ஜெயந்தி என்பவர் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “22 ஆண்டுகால தங்களது கனவு நிறைவேறியுள்ளது. 22 ஆண்டுகளாக கண்ணப்பர் திடலில் வீடற்றோர்கான காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். குறிப்பாக, பெண்கள் மாதவிடாய் காலங்களில் படும் கஷ்டத்தை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதற்கு தீர்வு கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறுகையில், “2003ல் தங்களை அப்பகுதியில் இருந்து காலி செய்தனர். முதலில் 3 மணிநேரத்திற்கு இங்கு தங்குமாறு கூறி அவை 3 மாதங்களாக மாறி தற்போது 22 வரும் கடந்து விட்டது. வரும் போது 36 குரும்பங்கள் இருந்தது. தற்போது 114 குடும்பங்களாக மாறிவிட்டது. இதனால், இப்பகுதி மாணவர்களின் கல்வி தகுதி பின் தங்கியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணப்பர் திடல் மக்கள் போராட்டம்: அதனைத்தொடர்ந்து, விழா நிறைவடைந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், மேயர், அதிகாரிகள் என அனைவரும் சென்ற நிலையில், கண்ணப்பர் திடலில் உள்ள பொதுமக்களில் சிலர், பல ஆண்டு காலமாக தாங்கள் கண்ணப்பர் திடலில் வசித்து வருகிறோம். தங்களுக்கு வீடு வழங்க வில்லை என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அமைச்சரிடம் கோரிக்கை வைக்க விடவில்லை என்று காவல்துறையிடம் வாக்குவாதம் நடத்தினர். தாங்களும் கடும் மழை மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்படுவதால் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி!