தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போர் பரணி இசைத்து விட்டது.. திமுக வெற்றி வாகை சூட தயார்" - அமைச்சர் தங்கம் தென்னரசு - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Parliament Election 2024: இந்தியாவிற்கு மாற்றம் கொண்டு வர இந்தியக் கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கியுள்ளதாகவும், தொண்டர்கள் வியூகம் வகுத்து வெற்றி வாகை சூட தயாராகிவிட்டனர் எனவும் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Minister Thangam Thennarasu
Minister Thangam Thennarasu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 11:29 AM IST

விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர்களும், மாநில அமைச்சர்களுமான தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வரும் 23ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருவதை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பிரச்சார வருகை குறித்தும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சிறப்பான வருகை குறித்தும் இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலமைச்சர் நம் மீது நிறைந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை ஒருபோதும் நாம் இழந்ததில்லை. போர் பரணி இசைத்து விட்டது. தொண்டர்கள் வியூகம் வகுத்து வெற்றி வாகைசூடத் தயாராகிவிட்டனர். ஏப்ரல் 19ஆம் தேதி அறிவிப்பு இதை வெளிக்காட்டும். இந்தியத் திருநாடு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி விட்டது.

இந்தியாவிற்கு மாற்றம் கொண்டுவர இந்தியத் தலைவராக முதலமைச்சர் மாறி இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார். பிற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறிவரும் சூழ்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ள ஒரே இயக்கம் திமுக தான்.

கடந்த 2019-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லாத போது வெற்றிக் கூட்டணியை உருவாக்கி, 38 இடங்களில் வெற்றி பெற்று, 2024-லும் சிறு குறைபாடுகூட இல்லாமல் தொடர்ந்து 3 முறை ராஜதந்திர கூட்டணியைக் கட்டமைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெற்றிபெறப் பாடுபட வேண்டும். இனிவரும் காலங்களில் விருதுநகர், தென்காசி மற்றும் இராமநாதபுரம் தொகுதிகளை மாற்றுக்கட்சியினர் மறக்கும் அளவிற்கு திமுக கூட்டணியின் வெற்றி இருக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "தேர்தல் குறித்த தெளிவு தொண்டர்களுக்கு வேண்டும். அது திமுக தொண்டர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாததால், திமுக பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவு அன்று நாம் வெற்றி பெற்று வீட்டிற்குச் செல்வோம்.

மற்றவர்கள் தோல்வி சோகத்தில் 2 நாட்கள் கழித்துத்தான் வீட்டிற்குச் செல்வார்கள். எந்த ஒன்றியம், நகரத்தில் ஓட்டுக் குறைகிறதோ அவர்கள்மீது தலைமை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். எனவே அதிக ஓட்டு வாங்கி இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் ஸ்டாலின் எனப் பெயர் வாங்க வேண்டும். மேலும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது சிறப்பான வரவேற்புக் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒத்த வீடியோவால் பறிபோன எம்பி வாய்ப்பு.. திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி என்ன? - KMDK Namakkal Candidate Changed

ABOUT THE AUTHOR

...view details