சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர், "நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, அதற்கான காரணங்களை உடனடியாக கண்டறிந்து
அவற்றை உடனுக்குடன் சரி செய்து, பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, சீரான மின் விநியோகம் வழங்கிடவும், மின் தடங்கல் ஏற்பட்டால் முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும்" என அறிவுத்தினார்.
நீலகிரி மாவட்டத்திற்கான அறிவுரை:நீலகிரி மாவட்டத்தில், கனமழையின் காரணமாக இதுவரை பாதிப்படைந்த 230 உயரழுத்த மின் கம்பங்களில், 200 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, 466 தாழ்வழுத்த மின் கம்பங்களில், 302 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. பாதிப்படைந்த 25 மின் மாற்றிகளில், 16 மின் மாற்றிகளில் சரி செய்யப்பட்டும், மீதமுள்ள 9 மின் மாற்றிகளுக்கு பின்னூட்டம் (Back Feeding) வழியாக சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 250 பேர் கொண்ட குழு தற்போது களத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது.