சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல அதிமுக செயல்படுகிறது. உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு அன்றைய தினம் கையெழுத்திட்டதே தற்போதைய இந்த நிலைக்கு காரணம். அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 766 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டது.
2011 - 12 ஆண்டு வரை மின்சார பகிர்மான உற்பத்தி 18 ஆயிரத்து 954 கோடியாக வழங்கினோம். தற்போது ரூ.43 ஆயிரத்து 493 கோடி கடன் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் அதிமுகவினர் மின் உயர்வை விமர்சிக்கின்றனர். இந்தியாவின் தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் மிகமிக குறைவாக உள்ளது. இந்த பிரச்னை அதிமுக ஏற்படுத்தியது.
இந்த நிதி இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறை கடன் மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு வட்டியானது 2011- 2012ல் ரூ.488 கோடியாக இருந்தது. தற்போது 2020 - 2021ல் ரூ.16 ஆயிரத்து 511 கோடியாக அதிகரித்துள்ளது.