சென்னை: திமுக பவள விழா பொதுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டு மேடை அமைப்பதற்கான அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது, “வருகிற 28 ஆம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். சொல்லப்போனால் அறிவிப்பானது நாளை கூட வந்தாலும் வரலாம், நாங்கள் அனைவரும் அதற்காக தயாராக உள்ளோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி!
முன்னதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் இடையே அதிகமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொறுப்புகள் மாறுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்” என கூறியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற “கோரிக்கைகள் வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருதுபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “உங்களுக்கும் மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” என்ற கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.