சென்னை:நடப்பாண்டிற்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கயிறு தொழிலை ஊக்குவிக்க செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு 25 கோடி தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை மட்டையில் இருந்து தென்னை நார் உள்ளிட்ட கயிறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கன்னியாகுமரியில் 300 தென்னை நார் சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. கன்னியாகுமரியில் தரமான நார் உற்பத்தி செய்யப்படுவதால் இதனை நவீன முறையில் மேம்படுத்த குறு குழுமங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.