சென்னை:மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தை நேசிப்பதாகவும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடியபோது தமக்கு இடம் கொடுத்தது சென்னைதான்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
"கேரள மக்கள் கொடுத்த ஆசீர்வாதத்தில் அமைச்சராக ஆகியுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்பே நான் எம்பியாக வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கும் பயனுள்ளவனாக இருப்பேன் என கூறியிருந்தேன் என்றும், இப்பொழுது என்னை தேர்வு செய்துள்ளதால் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று செய்ய வேண்டிய வேலைகளை செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
"காவிரி குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் கட்டாயமாக நடக்க வேண்டும் எனவும், பெட்ரோலியத்தை பொறுத்தவரையில் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது; இதை பற்றி கற்றுக் கொண்டுதான் அதனுடைய வேலைகளை நான் செய்ய முடியும்" என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.