சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஜன.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், பயணிகளின் பேருந்து சேவையைப் பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகளை ரூ.135.48 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 26 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 38 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 33 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 17 பேருந்துகள் என மொத்தமாக 150 புதிய தாழ்தள நகரப் பேருந்துகளைப் பொதுமக்களின் போக்குவரத்து சேவையைப் பூர்த்தி செய்திடும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.