சென்னை:2024ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் சமூக வலைத்தள அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 741 நபர்கள், C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.