கரூர் :கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 'தமிழ்நாட்டில் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், மேலும் 3,558 பயனாளிகளுக்கு ரூ 37.01 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், இது கூட்டுறவு வார விழா மட்டுமல்ல. நம் அனைவரின் குடும்ப விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு செயல்படுத்தக் கூடிய திட்டங்களில், பெரும்பான்மையான திட்டங்கள் மகளிருக்கு பயன் தரக்கூடிய திட்டங்களாக வடிவமைத்து அதனை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 13 லட்சம் மகளிர் பயன்பெறும் வகையில், ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு நகைக்கடன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். இதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.63 கோடி அளவில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 ஆயிரம் மகளிர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.
சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ரூ.2,756 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்து 15 லட்சத்து 88 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ரூ.26 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு, மொத்தம் 13 ஆயிரம் மகளிர் பயன்பெற்றிருக்கிறார்கள்.