சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்களுடன், வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த ஆய்வின் போது, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலரிடமும் அதற்கான காரணத்தை அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்து தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வகையில் அனைத்து அலுவலர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மழைக்காலங்களின் போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு, பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் பொருட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் இதுவரை 6,024 பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 503 பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:எலி மருந்து கசிந்து மரணித்த குழந்தைகள்: வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு!
எதிர்வரும் கோடை கால மின் பளுவினை எதிர்கொள்ளும் விதமாக, சென்னைமண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர், பருத்திப்பட்டு, சதர்ன்அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன்தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் 33/11 கி. வோ. துணை மின் நிலையங்கள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் AAI Staff Quarters, மாங்காடுஆல்டிஸ், அரசன்கழனி மற்றும் குறிஞ்சி நகர் ஆகிய 4 இடங்களில் 33/11 கி. வோ.துணை மின் நிலையம் 96.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவதிட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தை பொறுத்தவரை தற்போது துணைமின் நிலையங்களில் இயக்கத்தில் உள்ள 16 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடவும், இதேபோன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை கால மின் பளுவினை கருத்திற்கொண்டு தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான தளவாட பொருட்கள்மற்றும் உபகரணங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், மின்கட்டமைப்பினை சீர் செய்யும் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் உரியபாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பணிகளில் ஈடுபட்டு விரைவாக மின் கட்டமைப்பினைச் சரி செய்யுமாறும் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்