கரூர்: மாவட்டத்தில் ஏற்றுமதி தொழில் வளர்ச்சியை 2030க்குள் 50,000 கோடியை இலக்காக வைத்து ''கரூர் விஷன் 2030'' என்ற தலைப்பில் நடைபெற்ற 12,000 பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட மாரத்தான் போட்டியினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூர் விஷன் 2030
இதனைத் தொடர்ந்து வெண்ணமலை அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழில் முனைவோர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்திற்கு 3,000 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு பொறுப்பேற்றதும் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு ஆணை பெறப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில திட்டங்கள் நிலம் கையகப்படுத்தும் நடைமுறையால் தாமதமாகி வருகிறது, அந்தப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
இதையும் படிங்க:'திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்கா வரை சென்று சந்தி சிரிக்கிறது' - சீமான் விளாசல்!
அந்த வகையில், கரூர் மாநகரில் டைடல் பார்க் தொழில் நுட்ப பூங்கா துவங்குவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் துவக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றாலும் கூட தனது சொந்த தொகுதியான கரூர் தொகுதியில் டைடல் பார்க் அமைக்க வேண்டும் என்பது எனது ஆசை, அதனை நிறைவேற்றும் வகையில், பணிகள் துவங்கப்பட உள்ளது என்றார்.
மேலும், தொழில் முனைவோர் கூட்டமைப்பு இலக்கான ''கரூர் விஷன் 2030'' இலக்கை எட்டுவதற்கு அமைச்சர் என்ற முறையில் தானும், தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று போதிய தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும். தன் மீது நம்பிக்கை வையுங்கள்; நிச்சயம் உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிக் காட்டுவேன்.. அதுவே எனது பொறுப்பு, எனது கடமை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்தில் காலாவதி ஆனதால் அகற்றப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு சுமார் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சிஐஐ சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்